×

பாத வெடிப்பு 6 தீர்வுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நமது  உடலில்  ஏற்படும் பிரச்னைகளில் பொதுவாக  சந்திக்கக் கூடிய  ஒன்று  பாத வெடிப்பு. பாத வெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடியதாகும்.  பாதங்களை  சரியாக  பராமரிக்காததாலும்,  சருமத்தில்  ஈரப்பதம் குறைவதாலும் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. அதிலும்  குறிப்பாக, பெண்களே அதிக  அளவில்  பாத வெடிப்பு பிரச்னையை சந்திக்கின்றனர். பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு பிரச்னையிலிருந்து தற்காத்துக் கொள்ள சில எளிய கை வைத்தியங்களைத் தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழம்:  வாழைப்பழத்தில்  வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளதால்  சருமத்தில் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகிறது. வாழைப்பழத்தை நன்கு மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் வரை உலரவிட்டு பின்பு கழுவி வர பாதவெடிப்பு சரியாகும்.

தேன்:  பாதவெடிப்பை சரி செய்ய தேன் சிறந்த மருந்தாக  பயன்படுகிறது. பாதங்கள்  மூழ்கும் அளவு வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் தேன்  கலந்து அதில்  பாதங்களை  20 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு  காலை   அலம்பி விடவும். வாரத்தில்  ஒரு நாள்   இப்படி செய்து வரலாம்.

கற்றாழை: கற்றாழை  சாற்றை  இரவில் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவிவிடவும். வாரத்தில் 2 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.

சமையல் சோடா: சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, ப்யூமிஸ் கல் கொண்டு பாதங்களை தேய்த்து  பின் சுத்தமான நீரில் கழுவினால்  பாதவெடிப்பு  சரியாகும்.

எலுமிச்சை: புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் எலுமிச்சை சாறை பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும். இப்படி  செய்வதாலும்  பாதங்களில்  வெடிப்பு சரியாகும்.

மவுத்வாஷ்: வாய்க்கொப்பளிக்க பயன்படுத்தப்படும் மவுத்வாஷில் ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். எனவே, வெதுவெதுப்பான நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 20 நிமிடங்கள் வரை  பாதங்களை வைத்திருந்து பிறகு ப்யூமிஸ்கல் கொண்டு தேய்த்து வந்தால்  பாத வெடிப்பு சரியாகும். இதனை வாரம் ஒருமுறை  செய்து வருவது  மிகவும் நல்லது.

தொகுப்பு : ரிஷி

Tags :
× RELATED சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்!